
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இந்த அதிரடி வேட்டையில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய படைகளின் பதிலடி காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், விடுமுறையில் சென்றுள்ள துணை ராணுவப்படையினரின் விடுமுறையை ரத்து செய்து உடனே பணிக்கு திரும்ப அழைப்பு விடுக்குமாறு அனைத்து துணை ராணுவப்படைகளின் தலைவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோருடன் தொடர்பில் உள்ள அமித்ஷா, எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். மேலும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.