அசாமில் இந்தியாவின் முதல் விண்வெளி குப்பை கண்காணிப்பு 'ரேடார்' - இஸ்ரோ தலைவர் தகவல்

17 hours ago 2

திஸ்பூர்,

உலக நாடுகள் விண்வெளியில் ஏவும் ராக்கெட்டுகளின் பாகங்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவை விண்வெளி குப்பையாக மாறுகின்றன. விண்வெளி குப்பைகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் உள்ளன.

சில குப்பைகள் பூமத்திய ரேகைக்கு மேலே 35 ஆயிரத்து 786 கிலோ மீட்டர் உயரத்தில் புவிசார் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. ஒரு மணிநேரத்திற்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேல் நகரும் விண்வெளி குப்பைகள் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் மீது மோதியுள்ளன.

விண்வெளி குப்பைகளை குறைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த விண்வெளி குப்பைகள் பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு கடுமையான கவலைகளை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில், அசாம் மாநிலம், கம்ரூப் மாவட்டத்தில் மலைகளால் சூழப்பட்ட சந்திராபூர் நகரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய செயற்கைக்கோள்களுக்கு குப்பைகள் மற்றும் பிறவற்றால் ஆபத்துகளை கண்டறிய, விண்வெளியில் முன்கூட்டிய எச்சரிக்கை அளிக்கும் அமைப்பான நேத்ரா திட்டத்தின் (விண்வெளி பொருள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான வலையமைப்பு) கீழ் ரேடார், ஆப்டிகல் தொலைநோக்கிகள், கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் இந்த நிதியாண்டிற்குள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் முதல் திட்டமாகும். இந்த மையத்தை சந்திரபூரில் செயலிழந்த அனல் மின் நிலையம் அமைந்துள்ள நிலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ரேடார்கள் வலையமைப்பாக இருந்தாலும், விண்வெளியில் உள்ள அனைத்து பொருட்களையும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரபூரில் 'ரேடார்' நிறுவப்படும் இடத்தை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரபூரில் உள்ள ரேடார் அமைப்பு 4 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்றும், நேத்ரா திட்டத்தின் மூலம், இஸ்ரோ ஒரு கண்காணிப்பு அமைப்பை நிறுவவும், உலகளாவிய வலையமைப்பின் ஒரு பகுதியாக மாறவும், துல்லியமான தகவல்களை அளிக்கவும் முடியும் என்றும் கூறினார்.

Read Entire Article