அசல் ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவுகளை திருப்பி அனுப்பக்கூடாது: பதிவுத்துறை உத்தரவு

3 months ago 9

சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறை போலி ஆவணங்களை தடுப்பதற்கான பல சட்ட திட்டங்களை வகுத்து பல மாற்றங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பதிவு சட்டப்பிரிவு 55(A) மூலம் கடந்த 2022ம் ஆண்டு முதல் அசல் ஆவணங்களின்றி பதிவு செய்யக் கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைனில் பதிவை மேற்கொள்ளும் பொதுமக்கள், அதற்குண்டான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. பதிவு சட்டப்பிரிவு 55(A) விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, அசல் ஆவணங்களை தவறவிட்ட பொதுமக்கள் தங்களது சொத்துகளை பதிவு செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமின்றி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே இந்த விதிகளை திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், ரியல் எஸ்டேட் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த விதிகளில் திருத்தம் செய்ய உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில் அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை கூடுதல் ஐஜி அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரம் செய்ய பதிவு செய்யப்படும் என்று சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. மூல ஆவணங்களின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள நகல் ஆவணத்தை பார்த்து பத்திரப் பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது என்று அறிவுறுத்தியுள்ளது.

The post அசல் ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவுகளை திருப்பி அனுப்பக்கூடாது: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article