அசத்தும் ஆலங்குளம் விவசாயி…

2 months ago 9

விவசாயிகளை ஊக்குவிக்கவும் விவசாயத்தை அதிகப்படுத்தவும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை செயல்படுகிறது. பல விவசாயிகளை நேரடியாக சந்தித்து மானிய விலையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு விவசாயம் சார்ந்த பல பயிற்சி வகுப்புகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் இந்த விவசாய மானிய விலை திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிதான் சாக்ரட்டீஸ். நெல்லை அருகே ஆலங்குளம், கரும்புளியூத்து பகுதியில் இருக்கிறது இவரது விவசாய பூமி. மொத்தம் 35 ஏக்கரில் பெரிய முறையில் விவசாயம் செய்து வருகிறார். மிளகாய், வெண்டை, கத்தரி, பந்தல்காய்கள் அதைத்தொடர்ந்து 10 ஏக்கரில் நெல்லி சாகுபடி செய்யும் சாக்ரட்டீஸை அவரது விவசாய நிலத்திலையே சந்தித்து பேசினோம்.

எனக்கு இப்போ 60 வயசு. கடந்த 42 வருசமா விவசாயம் மட்டும்தான் என்னுடைய தொழில் என தனது பேச்சைத் தொடங்கினார் சாக்ரட்டீஸ்.எனது குடும்பம் ஒரு விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தைப் பற்றி சிறு வயதில் இருந்தே எனக்கு நன்கு பரிட்சயம் இருக்கிறது. தற்போது 35 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். அதில், கத்திரிக்காய் 3.15 ஏக்கர், மிளகாய் 3.5 ஏக்கர் பயிரிட்டிருக்கின்றேன். இதன் அறுவடை சமீபத்தில்தான் முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் புடலை பயிரிட்டு வருகிறேன். பயிரை மாற்றி பயிரிடுவதால் மண்ணின் வளம் மேம்படும். மிளகாய் மகசூலை தொடர்ந்து கத்தரிக்காய் மகசூல் தற்போது தான் ஆரம்பித்து உள்ளது. கத்திரிக்காய் தினசரி 500 கிலோ மகசூல் ஆகிறது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. இந்த மகசூல் இன்னும் போகப்போக அதிகரிக்கும்.

அதேபோல கடந்த 8 வருடங்களாக நெல்லி சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் 4 ஏக்கரில் தொடங்கினேன். தற்போது 10 ஏக்கரில் நெல்லி சாகுபடி செய்து வருகிறேன். NA 7 என்கிற ஒட்டுரக நெல்லியை தோட்டக்கலைத்துறையிடம் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். நெல்லியைப் பொருத்தவரை இரண்டு பக்கமும் 15 அடி இடைவெளியில் நட வேண்டும். அப்படி நடவு செய்தால் ஏக்கருக்கு 180 செடிகள் நட முடியும். தற்போது நெல்லி செடிகள் மட்டும் சராசியாக 1700 இருக்கும். அப்படி நடுகிற செடியில் இருந்து 3வது வருடத்தில் இருந்து காய்கள் காய்க்கத் தொடங்கிவிடும். நெல்லியில் வருடத்திற்கு இரண்டு சீசன் இருக்கிறது. இந்த 2 சீசனில் ஐப்பசி கார்த்திகை மாதங்கள்தான் நெல்லியில் அதிக மகசூல் பார்க்கமுடியும். பராமரிப்பை பொறுத்தவரை நெல்லி மரத்திற்கு அதிக தண்ணீர் தேவை இருக்காது. அவ்வப்போது இயற்கையான உரம் மட்டுமே போதும். நெல்லி விவசாயத்தில் பெரும்பலான விவசாயிகள் ஒட்டுக் கட்டுவதில் தவறு செய்து விடுகின்றனர். அதனால் அவை நாட்டு நெல்லிக்காயாக மாறி விடுகிறது. ஆரம்பத்தில் ஓராண்டு ஒட்டுக்கட்டி பராமரிக்க வேண்டும். அதைச் செய்ய விவசாயிகள் பலர் தவறி விடும் நிலை உள்ளது. இதனால் நெல்லி விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லை என ஒரு கருத்து நிலவுகிறது.

எனது தோட்டத்தில் விளைகிற நெல்லியை அந்த அறுவடை சீசனில் மட்டும் மொத்தமாக குத்தகைக்கு கொடுத்து விடுவேன். கடந்த வருடம் நெல்லி அறுவடையின்போது 6 லட்சத்திற்கு குத்தகைக்கு கொடுத்தேன். அதில் 1 லட்சம் செலவு போக மீதம் 5 லட்சம் எனக்கு லாபம்தான். என்னிடம் இருந்து நெல்லியை குத்தகைக்கு வாங்குபவர்கள் அதனை தரம் பிரித்து வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் என 3 முறையில் விற்பனை செய்கிறார். நெல்லியில் மிக முக்கியமான விசயமே கவாத்து செய்வதுதான். வருடத்திற்கு 2 கவாத்து கட்டாயம் செய்ய வேண்டும். அதில் அறுவடை முடிந்தவுடன் செய்ய வேண்டிய கவாத்து முக்கியமானது. எங்கள் பகுதியில் தண்ணீர் குறைவு என்பதால் சொட்டுநீர் பாசனம் வழிதான் தண்ணீர் பாய்ச்சுகிறேன். 35 ஏக்கரில் பெரிய அளவில் விவசாயம் செய்வதால் எனது தோட்டத்தில் விவசாயப் பணிக்காக எப்போதுமே ஆட்கள் இருப்பார்கள். விளைபொருட்களை எங்கு விற்பது யாரிடம் விற்பது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் நமது உழைப்பிற்கான பலனை நாம் முழ்மையாக பெற முட்யும் என்கிறார் விவசாயி சாக்ரட்டிஸ்.
தொடர்புக்கு:
சாக்ரட்டீஸ்: 94873 02550.

The post அசத்தும் ஆலங்குளம் விவசாயி… appeared first on Dinakaran.

Read Entire Article