ஊட்டி : அகில இந்திய என்சிசி மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் ஊட்டியில் துவங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த 510 மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து வரக்கூடிய என்சிசி மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
இப்பயிற்சியின் நோக்கம் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்துதல், மனவலிமை, தலைமை பண்பை மேம்படுத்துதல், தன்னார்வத்தை தூண்டுதல், தேசிய ஒருமைபாட்டை வளர்த்தல் போன்றவற்றை செய்வதுடன் வாழ்வில் உயர் பதவிகளை அடைய வழிவகை செய்வதாகும்.
அகில இந்திய என்.சி.சி மாணவிகளின் 38ம் ஆண்டு மலையேற்ற பயிற்சி முகாமின் முதல் குழுவின் மலையேற்ற முகாம் ஊட்டியில் துவங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கோவா, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 510 பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் அமைந்துள்ள ஏகலைவா பழங்குடியினர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். காலை 8 மணியளவில் புறப்பட்டு நாள்தோறும் 20 கிமீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தின் போது ஸ்டாரபெரி விவசாய பண்ணை, ஊட்டி மலை ரயில் பாதை, பழங்குடியினர் ஆய்வு மையம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
மேலும் பழமை வாய்ந்த மலை ரயிலிலும் பயணிக்கின்றனர். இது தவிர வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல உள்ளனர். இம்மலையேற்ற பயிற்சி முகாமானது கோவை மண்டல என்சிசி, குரூப் கமாண்டர் கர்னல் ராமநாதன் தலைமையில் நடந்து வருகிறது.
இதில் என்சிசி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல் குழுவின் முகாம் வரும் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. 2வது குழுவின் முகாமில் இதில் உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த என்சிசி., மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இம்முகாம் 13ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.
The post அகில இந்திய என்சிசி மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.