அகலம் குறைத்து அமைக்கப்பட்டதால் புதிய சாலை அமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய பழங்குடி மக்கள்

3 weeks ago 4

*ஊட்டி அருகே பரபரப்பு

ஊட்டி : ஊட்டி அருகே ஆனைக்கட்டி, சிறியூர் பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் வழியில் அகலத்தை குறைத்து நடந்த புதிய சாலை அமைப்பு பணிகளை பழங்குடியின மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட சிறியூர், ஆனைக்கட்டி ஆகிய பழங்குடியின கிராமங்களில் இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக மசினகுடி வெளி மண்டல பகுதியில் வருகிறது. பழங்குடியின மக்களுக்காக 1983ம் ஆண்டு வாழைத்தோட்டம் சந்திப்பு முதல் சிறியூர் வரை 4 மீட்டர் அகலத்தில் 21 கிமீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. 40 ஆண்டுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு குண்டு, குழிகளை சரி செய்து மீண்டும் 3.75 மீட்டர் அகலத்தில் தார் சாலை அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கியது. கடந்த மாதம் அதற்கான டெண்டர் விடப்பட்டு கடந்த வாரம் பணிகள் தொடங்கிய நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனத்துறை அதிகாரிகள், 2.80 மீட்டர் அலத்திற்கு மட்டுமே சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டபடி ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்ட நிலையில், சாலையின் அகலத்தை குறைத்து சீரமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆனைகட்டி மற்றும் சிறியூர் கிராமத்தை சார்ந்த ஏராளமான பழங்குடியின மக்கள் நேற்று சாலை பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினர்.

தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள 3.75 மீட்டர் அகலத்தில் சாலையை அமைக்க வேண்டும் என்றும், அகலத்தை குறைத்து சாலை அமைக்கக்கூடாது எனவும், மீறி அமைக்க முயன்றால் பணிகளை மேற்கொள்ள விடமாட்டோம் என்றும் கூறினர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சாலை பணி நிறுத்தப்பட்ட நிலையில் சாலையை ஏற்கனவே உள்ளதுபோல அமைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 7 ஆதிவாசி கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக விரைவில் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர்.

The post அகலம் குறைத்து அமைக்கப்பட்டதால் புதிய சாலை அமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய பழங்குடி மக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article