புதுடெல்லி,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பொதுச்செயலாளராக அங்கீகரித்த அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா.ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகிய இருவரும் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றபோது மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அடுத்த விசாரணை தேதி குறித்த நோட்டீசை மனுதாரருக்கு அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 13-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போதும் மனுதாரர் தரப்பினர் ஆஜராகவில்லை என்றால் வழக்கு விசாரணையை தொடர மனுதாரர் விரும்பவில்லை என கருதப்படும் என்று தெரிவித்துள்ளனர்.