
சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலியில் இன்றைய தினம் கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் நீண்ட நேரமாக தனக்கு துணை கேள்வி கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆனால் சபாநாயகர் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கிக் கொண்டே இருந்தார். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய பால் மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு அம்மன் கே அர்ஜுனன் டென்ஷனாக இருந்தார். இதனையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தன் இருக்கையில் அமர்ந்தபடியே சபாநாயகரை நோக்கி வாய்ப்பு வழங்கவில்லை என ஆவேசமாக கத்தினார்.
கோபமடைந்த சபாநாயகர் அப்பாவு, "அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இதுபோல மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு. எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கலாமா..? கொறடா வேலுமணி நீங்களும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... நான் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருக்கும் சரிசமமான வாய்ப்பை வழங்கி வருகிறேன்.
அ.தி.மு.க.வில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறீர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் பேச வாய்ப்பு வழங்க முடியுமா..?.. அம்மன் அர்ஜுனன் இதே போல இருக்கையில் அமர்ந்து கொண்டு மிரட்டும் தொணியில் பேசிக் கொண்டே இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.