பெப்பர் ஸ்பிரே, அலர்ட் விசில், எச்சரிக்கை அலாரம், டாக்டிகல் பேனா, டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் , காவலர் செயலி என பெண்களின் பாதுகாப்புக்காக கடந்த 20 வருடங்களாகவே பல பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவையனைத்தும் தற்போது பயன்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதுமையான காலணியை கண்டுபிடித்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை உருவாக்கியுள்ளனர்.பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்தக் காலணியின் அடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உடனே அது எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் செல்போன்களுக்கு அனுப்பிவிடும்.இந்த எச்சரிக்கை மூலம் காலணி அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை எளிதாக கண்டறியமுடியும். மேலும், இதில் உள்ள மைக்ரோபோன் மூலம் காலணி அணிந்திருப்பவரின் இடத்திலுள்ள உரையாடல்களைக் கூட கேட்க முடியும். இந்த காலணியை பயன்படுத்தி தாக்குதல் நடத்துபவர்களை மிதித்தால், அதில் இருந்து வெளியாகும் மின்சாரம் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலையச் செய்யும்.
அதே நேரத்தில், காலணி அணிந்திருப்பவருக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த காலணி குறித்து தயாரித்த மாணவர்கள் கூறுகையில், “நாங்கள் உருவாக்கிய செயலி, காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.காலணியில் கேமராவையும் பொருத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் காலணி அணிந்திருப்பவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியலாம். பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் தற்சமயம்,” என்றனர்.தற்சமயம் ஹீல் உயரமாக இருக்கும் காலணிகளில் தான் இந்த பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா பெண்களும் உயரமான ஹீல் போடாதவர்கள் என்பதால் விரைவில் தட்டையான காலணிகளில் இந்த வசதியைக் கொண்டுவரவும் மாணவர்கள் முயன்று வருகிறார்கள். இதன்படி நாம் விரும்பி வாங்கும் காலணிகளிலும் இவற்றை பொருத்திக்கொள்ளும் வசதிகளும் எதிர்காலத்தில் கொண்டுவரும் திட்டம் உள்ளது என்கிறார்கள் இந்த குட்டி விஞ்ஞானிகள்.
– கவின்.
The post SOS காலணிகள்… உ.பி மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு! appeared first on Dinakaran.