சென்னை: இந்திய விமானப் படையின் 92ம் ஆண்டு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி அளவில் பிரமாண்டமான விமான சாகச நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 8000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த 2003ம் ஆண்டு விமான சாகசம் நடைபெற்ற நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. பொதுவாக விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களாக முன்கூட்டியே ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரபேல் ஏர்கிராப்ட் ஆகியவை பங்கெடுத்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன.
இந்நிலையில் மிகப் பிரமாண்டமாக, பொதுமக்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மெரினாவில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சாகச நிகழ்ச்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகள், பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை மற்றும் முப்படை அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விமான படை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் நகரிலும், கடற்கரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
The post 92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்: போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.