90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அரியானாவில் 65% ஓட்டுப்பதிவு: அக்.8ம் தேதி ரிசல்ட்

3 months ago 20

சண்டிகர்: அரியானா சட்டப்பேரவைக்கு 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்படுகின்றன. 90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பா.ஜ ஆட்சி நடக்கிறது. தற்போது முதல்வராக நயாப்சிங் சைனி உள்ளார். அங்கு நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ, காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மி, ஐஎன்எல்டி-பிஎஸ்பி, ஜேஜேபி-ஆசாத் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. 90 தொகுதிகளிலும் மொத்தம் 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 464 பேர் சுயேச்சையாக போட்டியிட்டனர். அரியானா முழுவதும் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 27,866 மின்னணு எந்திரங்கள் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டன. 30,000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 225 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. பஞ்ச்குலா மற்றும் குருகிராம் மாவட்டங்களில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

குருக்ஷேத்திராவில் உள்ள லட்வா தொகுதியில் போட்டியிடும் முதல்வர் நயாப்சிங் சைனி, அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரைங்கரில் உள்ள தனது சொந்த கிராமமான மிர்சாவில் வாக்களித்தார். ஒன்றிய அமைச்சரும், அரியானா முன்னாள் முதல்வருமான மனோகர் லால் கட்டார் கர்னாலிலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கிச்சுடும் வீராங்கனை மனு பாக்கரும் அவரது பெற்றோரும் ஜஜ்ஜார் மாவட்டத்தின் கோரியா கிராமத்திலும் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர்கள் பூபீந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் சொந்த பூத்களில் வாக்களித்தனர். குருஷேத்ரா மக்களவை தொகுதி பா.ஜ எம்பி நவீன் ஜிண்டால் குதிரையில் வாக்களிக்கச் சென்றார். ஜூலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், ஒலிம்பிக் மல்யுத்த வீரருமான போகட், மல்யுத்த வீரரும் காங்கிரஸ் உறுப்பினருமான பஜ்ரங் புனியா ஆகியோரும் வாக்களித்தனர். பா.ஜவின் குல்தீப் பிஷ்னோய், அவரது குடும்பத்தினர், ஜேஜேபியின் துஷ்யந்த் சவுதாலா, அவரது குடும்பத்தினர், ஆம் ஆத்மி கட்சியின் அரியானா பிரிவு மூத்த துணைத் தலைவர் அனுராக் தண்டா தான் போட்டியிடும் தொகுதியான கலயாத் தொகுதியிலும் வாக்களித்தனர்.

அரியானா முழுவதும் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. அரியானா ஜன் சேவக் கட்சியின் மேஹாம் தொகுதியின் வேட்பாளர் பால்ராஜ் குண்டு, முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் சிங் டாங்கி, தன்னையும் தனது உதவியாளரையும் வாக்குச் சாவடியில் வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டினார். நூஹ் மாவட்டத்தில் உள்ள புன்ஹானா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது இலியாஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ராஹிஷ் கானின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மற்ற இடங்களில் எல்லாம் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடியில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இறுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று அரியானாவில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.

 

The post 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அரியானாவில் 65% ஓட்டுப்பதிவு: அக்.8ம் தேதி ரிசல்ட் appeared first on Dinakaran.

Read Entire Article