
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம், பூங்குளம் ரங்கன் வட்டம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 9-ம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக செல்போன் மூலம் பழகி அவரை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். அப்போது மாணவியிடம் நைசாக பேசி, ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்புமாறும், இல்லையென்றால் வீடு புகுந்து வெட்டி விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன மாணவி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாலிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை அந்த வாலிபர் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார் இதுகுறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி வழக்குப்பதிவு செய்து, பூங்குளம் அடுத்த ரங்கன் வட்டம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர், அவரது நண்பர்களான பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியை சேர்ந்த ரஞ்சித், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை ஆலங்காயம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.