₹82 கோடியில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரம்

1 week ago 2

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி நகராட்சியில் 14 வார்டுகளில் ₹82 கோடி மதிப்பீட்டில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வீடு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமாரநதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்தன. கடந்த 2010ம் ஆண்டு, திமுக ஆட்சியின் போது, தர்மபுரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ₹32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

முதல்கட்டமாக 19 வார்டுகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. மதிகோன்பாளையம்-அரூர் பிரிவு சாலையில், பாதாள சாக்கடை கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதில் சுத்திகரிப்பு செய்து இறுதியாக கிடைக்கும் கழிவு மண் படிவம், சேகரித்து வைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில், தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, விவசாய பணிக்கு திருப்பி விடப்படுகிறது.

தற்போது, தர்மபுரி நகராட்சியின் 14 வார்டுகளில், 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ₹82 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு, அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த சில வாரங்களாக பணிகள் நடந்து வருகிறது. தற்போது பழைய நீதிமன்றம் வளாகத்தில், பாதாள சாக்கடை திட்டப்பபணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்டிஓ ஆபீஸ், ஆர்டிஓ வீடு, சார்பு கருவூல அலுவலகம், பிடிஓ ஆபீஸ், எம்பி மற்றும் எம்எல்ஏ ஆபீஸ், கிளைச்சிறை போன்ற இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. மேலும் முக்கிய வீதிகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. திருப்பத்தூர் சாலையில் 4 ஏக்கரில் கழிவுநீரை சுத்திகரிக்க, புதியதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து தர்மபுரி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தர்மபுரி நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், தினசரி 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வசதி உள்ளது. தற்போது 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு நிரந்தர பயனளிக்கும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும்.

கிணற்று நீர், ஆழ்துளை கிணற்று நீர் மாசடைவது தவிர்க்கப்படும். மழைக்காலத்தில் சாக்கடை நீருடன், மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தில் சேராத நபர்கள் உடனடியாக சேர வேண்டும். இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் பாதாள சாக்கடை இணைப்பில் சேர்ந்துள்ளனர். பிறநபர்களை சேர்க்கும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாத 14 வார்டுகளில், தற்போது ₹82கோடியில் பணிகள் நடக்கிறது. தனியாக சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ₹82 கோடியில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article