80 வயதிலும் நரை இல்லாத நீண்ட முடியுடைய பெண்கள்… : உலக சாதனை படைத்த சீன கிராமம் !

7 hours ago 2

2023 ஆம் ஆண்டு மட்டும் 32 பில்லியன் வருமானம் ஈட்டி இருக்கிறது ஷாம்பூ தொழில். ஷாம்பூ தொழிலில் மட்டும் இப்படி எனில் இன்னும் கண்டிஷனர், ஹேர் ஸ்பா, ஹேர் ஸ்டைலிங், இப்படி எத்தனையோ இருக்கின்றன. எனினும் பெண்கள் புலம்பி கொண்டு தான் இருக்கிறார்கள். அரை அடி கூந்தல் வளர்க்கவே 1008 ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் மாஸ்க் என எத்தனையோ வஸ்துகளை பயன்படுத்தியாக வேண்டி இருக்கிறது. இது போதாததற்கு இருக்கும் குப்பை, அழுக்கு இவற்றிலிருந்து மிச்ச முடியை காப்பாற்றுவதற்குள் வயது 40ஐ தொட்டிருக்கும் நாலு முடியும் கொட்டி விடுகிறது அல்லது நரைத்து விடுகிறது. ஆனால் சீனாவின் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இருக்கும் எட்டு மாத பெண் குழந்தை முதல் 80 வயது தள்ளாத பெண்மணி வரை அத்தனை பேருக்கும் அவர்கள் உயரத்திற்கு முடி கருகருவென வளர்கிறது. இந்த மொத்த முடி கிராமமும் உலகிலேயே மிக நீண்ட முடி கிராமம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. சீனாவின் குவாங்சி மாகாணத்தின் ஹுவாங்லுவோ கிராமம் முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட அருமையான கிராமம். இங்கே இருக்கும் பெண்கள் அத்தனை பேரும் இந்த ஷாம்பூ உள்ளிட்ட எந்த கூந்தல் சார்ந்த அழகு சாதன பொருட்களுக்கும் ஒரு பைசா கூட செலவு செய்வதில்லை.

ஆனால் இவர்களின் முடி 2.1 மீட்டர் (6.8 அடி) நீளம் வரை வளர்கிறது. மேலும் 80 வயது மூதாட்டிக்கு கூட ஒரு முடி நரைக்காமல், கருகருவென வலுவாக வளர்கிறது. இந்த கிராமமே முழுமையாக உலகின் சமீபத்திய வளர்ச்சிகள் அத்தனையில் இருந்தும் விலகி வேறு ஒரு கற்பனைக்கு எட்டாத வாழ்வியலில் வாழ்ந்து வருகிறார்கள். பழங்கால கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து இப்போதுதான் சுற்றுலா பயணிகளுக்கு அங்கே செல்ல அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மேலும் ஏதேனும் வகையில் வருமானம் வேண்டும் என்பதற்காகவே இந்த கிராம பெண்கள் தங்களது முடியை காட்சி பொருளாக மாற்றி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்கள். இவர்கள் முடிக்கு அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி வேகவைத்த கஞ்சியை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். இது பழங்கால இம்பீரியல் இளவரசி காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சிவப்பு யாவோ ( Yao) பெண்கள் என அழைக்கப்படும் இவர்கள் அத்தனை பேருமே சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஒரே மாதிரியான உடைகளை அணிகிறார்கள். இவர்களுக்கு முடி பரம்பரை சொத்து போல அவ்வளவு முக்கியம். மேலும் ஒரே ஒருமுறை அதுவும் 18 வயதை நெருங்கும் பொழுது இவர்கள் முடியை வெட்டிக்கொள்ள அனுமதி உண்டு. அதுவும் காது மடல் ஓரத்தில் இருக்கும் முடியை மட்டும்தான் வெட்டிக்கொள்கிறார்கள். வெட்டிய முடியை தங்களது பாட்டிகளுக்கு உச்சந்தலையில் வைக்கக்கூடிய தலைமுடி கொண்டை அலங்காரத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கிறார்கள். அந்த கிராமத்தின் வழக்கப்படி காது மடல் வரையில் வெட்டப்பட்ட முடியுடன் ஒரு பெண் இருக்கிறார் எனில் அவர் திருமணத்திற்கு தயாரான பெண் என அர்த்தம். மேலும் இந்த கிராமத்தின் வழக்கப்படி அவரவர் காதலன் மற்றும் கணவனை அவர்களை தேர்வு செய்யலாம்.

திருமண சீராகவே இவர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்கு முடியைதான் கொடுக்கிறார்கள். 1980களுக்கு முன்பு வரை இந்த கிராமத்தில் நிறைய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. திருமணமான பெண்கள் தங்களது முடியை பொதுவெளியில் அவிழ்த்து நீளமாக தொங்கவிடக்கூடாது. அவர்களின் நீண்ட முடியை பார்ப்பதற்கு அவர்கள் வீட்டாருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எந்தப் பெண்ணானாலும் கிராமத்துக்கு வெளியில் உள்ள ஆண்கள் இவர்கள் முடியை பார்க்கக் கூடாது. போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து அத்தனையும் ஒவ்வொன்றாக கலையப்பட்டு இருக்கின்றன. முடி வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய புனிதம் கிடையாது என்பதை பல கட்ட முன்னேற்றங்களுக்குப் பிறகு இந்த கிராமத்து பெண்கள் புரிந்துகொண்டு ஒவ்வொரு சட்டங்களாக உடைத்து எறிந்து இருக்கிறார்கள். அதே சமயம் இப்போதும் எவ்வளவு நீளத்திற்கு முடி வளர்கிறதோ அந்த அளவிற்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகும் என்னும் நம்பிக்கை இவர்களிடம் மாறாமல் இருக்கிறது.

நாளுக்கு நாள் விவசாயமும் குறைந்து வருமானமும் குறைந்து வரும் சூழலில் இவர்கள் சுற்றுலா தொழிலில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்கள். 82 குடும்பங்கள் 400 கிராம வாசிகள் கொண்ட இந்த கிராமத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் தங்களது நீண்ட முடியுடன் குழுவாக இணைந்து பாடி, ஆடி, நடனம் ஆடுவார்கள். தங்கள் முடியை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பித்து அவர்களின் தினந்தோறுமான பணிகள் மற்றும் கூந்தல் பராமரிப்பு குறித்து விளக்கி சொல்கிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது மாதம் நம் இந்திய மதிப்பில் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பாதிக்கிறார்கள்.

ஒரு பெண் வட்டமாக சட்டி போல் கட்டப்பட்ட முடியுடன் இருந்தால் அவர் திருமணமாகி இன்னும் குழந்தை பெறாதவர் என அர்த்தம். அதேபோல் மேலே பன் போல உப்பிய வடிவத்தில் முடியை கட்டி இருந்தால் அவர் திருமணம் ஆனவர் மற்றும் அவருக்கு குழந்தைகள் இருக்கிறது என்று அர்த்தம் அல்லது கர்ப்பமாக இருக்கிறார் என்று அர்த்தம். இங்கே இருக்கும் இயற்கையான மரக்கட்டைகளால் உருவாக்கப்படும் கிளிப், தலை அலங்கார பொருட்கள் வாங்குவதற்காகவே சீனாவின் மற்ற மாகாணங்களில் இருந்து பல பெண்கள் இங்கே திரண்டு வருகிறார்கள். அத்தனையும் மூலிகை கட்டைகளால் உருவாக்கப்பட்ட தலை அலங்கார பொருட்கள். அதன் மூலமாகவும் இந்த கிராம வாசிகள் சம்பாதித்து வருகிறார்கள். அதேபோல் தலை முடியை சற்றே மறைத்து தலைப்பாகை போல் கட்டி இருந்தால் அந்தப் பெண் திருமணத்திற்கு தயார் என்றும் அர்த்தம். அதாவது கணவன் மட்டுமே அவரது நீளமான முடியை பார்க்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு. ஆனால் சமீப காலமாகத்தான் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. இங்கு இருக்கும் பெண்கள் சருமமும் இயற்கையாகவே எந்த காஸ்மெட்டிக்குகளும் இல்லாமல் பளிங்கு போல் மின்னுகிறது.
– ஷாலினி நியூட்டன்

அரிசி நீர்

நியூயார்க் நகரைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர். மார்கரேட் ட்ரே இங்கே இருக்கும் பெண்களின் முடி குறித்த ஆய்வு செய்து தொடர்ந்து அரிசி கழுவிய நீர் கொண்டு தனது முடியையும் அலச துவங்கியிருக்கிறார். உண்மையாகவே நிறைய மாற்றங்களும் கூந்தல் வளர்ச்சியும் பெற்று வலிமையாக வளர்வதாக தெரிவித்துள்ளார். நம் அரிசிக்கே இப்படி எனில் இயற்கையாக விளையும் அரிசி நீர் இன்னும் எவ்வளவு ஆரோக்கியம் கொடுக்கும் என யோசித்துப் பாருங்கள். இதுவரையிலும் இவர்கள் அரிசி நீரை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துகிறார்கள் என்னும் எந்த ரகசியமும் தெரியாத நிலையில் டாக்டர். மார்க்ரேட் ட்ரே தனது ஆய்வின் மூலம் இந்த அரிசி நீரை எப்படி தயாரிக்க வேண்டும் என்னும் விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார். அரிசி நீர் என்பது அரிசியை முதன்முதலில் கழுவும் போது கிடைக்கும் அழுக்கு நீர் கிடையாது. இரண்டாவது மூன்றாவது முறை அரிசி கழுவிய நீரை அப்படியே ஒரு நாள் முழுக்க வைத்திருந்து பிறகு அதில் டீ ட்ரீ எண்ணெய், ரோஸ்மேரி அல்லது லாவண்டர் எண்ணெய் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைத்து பயன்படுத்தலாம். அவர்கள் தினந்தோறும் சாதம் வடிப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இப்படி சேகரித்து வைத்து பயன்படுத்தும் தேவை கிடையாது. பொதுவாகவே இந்தியா சீனா மக்கள் அதிகம் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள், அவர்களுக்கு தினம் தோறும் அரிசி நீர் கிடைப்பது அவ்வளவு கடினமில்லை. மற்ற நாட்டினர் இந்த வழக்கத்தை கடைபிடிக்கலாம் என்கிறார் டாக்டர். மார்க்கெட் ட்ரே. இந்த அரிசி நீரை முகம் கழுவவும் பயன்படுத்தலாம்.

 

The post 80 வயதிலும் நரை இல்லாத நீண்ட முடியுடைய பெண்கள்… : உலக சாதனை படைத்த சீன கிராமம் ! appeared first on Dinakaran.

Read Entire Article