80 வயதிலும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்!

2 weeks ago 7

நன்றி குங்குமம் தோழி

‘Age is Just a Number’ என்பதற்கு உதாரணமாக இருந்து வருகிறார் மயிலாடுதுறையை சேர்ந்த பார்வதி.பொதுநல மருத்துவராக பணியாற்றி வரும் இவர் தன் 80 வயதிலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து தன் சேவையை தொடர்ந்து வருகிறார்.மயிலாடுதுறையில் உள்ள பொறையார் கிராமத்து மக்கள் அனைவரின் குடும்ப மருத்துவராக இவர் வாழ்ந்து வருகிறார். மிகவும் பின் தங்கிய கிராமம் என்றாலும் அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெற்று நல்ல முறையில் மருத்துவம் பார்த்து வருகிறார். குறிப்பாக சாலை மற்றும் மின்சார வசதி ஏதுமில்லாத கிராமத்தில் கர்ப்பிணி பெண்களின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார் பார்வதி.

‘‘எனக்கு இப்போது வயசு 80. சொந்த ஊரு திருநெல்வேலி அருகில் உள்ள கல்லிடைக்குறிச்சி. அங்கதான் பிறந்து, வளர்ந்தேன். என் அப்பாவுக்கு நான் மருத்துவராகணும்னு ஆசை. நல்லா படிச்சி டாக்டராகணும்னு சொல்லுவார். எனக்கு அவரோட ஆசையை நிறைவேற்றணும். அப்பாவுக்கு வேலை காரணமா கடலூருக்கு மாற்றலான போது, நாங்களும் அங்கு சென்றுவிட்டோம். அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படிச்சேன். பள்ளியின் முதல் மாணவியா வந்தேன்.

அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. நான் படிக்கும் போது மருத்துவ படிப்பு ஆறு வருடங்கள். படிப்பு முடிச்சதும் திருமணம். கணவரும் மருத்துவர் என்பதால், பல இடங்களில் பணியிட மாற்றங்கள் இருந்தது. கடைசியாக நாங்க பொறையார் கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். கணவர் இங்குள்ள மருத்துவமனையில் வேலை பார்க்க, நான் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொண்டே மக்களின் வீட்டிற்கு சென்று மருத்துவமும் பார்க்கத் தொடங்கினேன்.

அந்தக் காலக்கட்டத்தில் இங்கு சாலை என்று எதுவுமே இருக்காது. போக்குவரத்து வசதியும் கிடையாது. சில சமயம் பிரசவம் பார்க்க அவர்கள் வீட்டிற்குதான் போகணும். அவர்கள் போக்குவரத்துக்கு மாட்டு வண்டி மட்டுமே பயன்படுத்துவதால், கர்ப்பிணி பெண்களால் பிரசவ காலத்தில் அதில் பயணிக்க முடியாது. அதனால் வீடுகளுக்கே சென்று பிரசவம் பார்த்திருக்கிறேன். மின்சாரம் இல்லாமல் அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில் நான் பார்த்த பிரசவங்கள் எல்லாமே சக்சஸ்தான்’’ என்றவர், அவருடைய மருத்துவப் பயணம் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘நான் இருந்தது ரொம்பவும் பின்தங்கிய கிராமம். அந்தக் காலங்களில் மருத்துவம் படித்தவர்கள் முதலில் கிராமங்களில் சென்றுதான் தங்களின் பணிகளை துவங்குவார்கள். மருத்துவம் குறித்து கிராமத்து மக்களுக்கு தெரியாது என்பதால், அவர்களின் வீட்டிற்ேக சென்று சிகிச்சை கொடுப்பார்கள். அப்படி கொடுத்தும் மக்களுக்கு மருத்துவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட வைப்பது பெரிய சவாலாக இருந்தது. மூடநம்பிக்கைகளை நம்பிய காலம். அவர்களின் உடலில் என்ன பிரச்னை என்று சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் பேசிப் ேபசி பிரச்னைகளை கண்டறிவோம். நாம் பேசுவதைப் பொருத்துதான் அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை ஏற்பட்டு பிரச்னைகளை சொல்லத் துவங்குவார்கள்.

அதன் பிறகு சிகிச்சை அளித்த பிறகுதான் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது. சிலர் மருத்துவத்திற்கு செலவு செய்ய பணம் இல்லாத காரணத்தாலும் சிகிச்சை எடுக்க வரமாட்டார்கள். அவர்களுக்கு இலவசமா சிகிச்சை கொடுத்திருக்கிறேன். சிலர் சிகிச்சைக்காக வந்திடுவார்கள். திரும்பி செல்ல பணம் இருக்காது. அவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவேன்.

பணத்தை விட மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. எல்லாவற்றையும் விட மருத்துவம் மேல் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன். பல பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்திருக்கிறேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடுவேன். இதுவரை 5000 பிரசவங்கள் வரை பார்த்திருப்பேன். குழந்தையில்லை என்று வருபவர்களுக்கும் சிகிச்சை அளித்து, அவர்களுக்கு குழந்தைபேறு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன். மற்ற நோய்களுக்காக சிகிச்சைக்காக வருபவர்களும் உண்டு. சிகிச்சை அளித்தும் பலன் இல்லாத போது, பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பேன்.

கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தேன். அவர்கள் எல்லோரும் நல்லபடியாக குணமாகி வந்ததைப் பார்த்த போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்று நான் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தைகளுக்கு திருமணமாகி அவர்கள் குழந்தைகளுக்கும் பிரசவம் பார்த்திருக்கேன். அவர்கள் பெரிதாகி கல்யாணமாகி அவர்களுக்கும் பிரசவம் பார்த்திருக்கிறேன். 1976 முதல் 2003 வரை தான் பிரசவங்கள் பார்த்தேன். தற்போது வயதான காரணத்தால் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறேன். மக்கள் இன்றும் என்னை நம்பி வருவதுதான் எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சொத்து’’ என மகிழ்ச்சியோடு சொல்கிறார் பார்வதி சந்திரசேகர்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்:செல்வ முருகன்

 

The post 80 வயதிலும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்! appeared first on Dinakaran.

Read Entire Article