8 ஆயிரம் யூனிட் கழிவுகள் வெளியேற்றம் செங்குளம் கண்மாயில் தூர்வாரும் பணி

1 month ago 4

*அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

சிவகாசி : 8 சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் செங்குளம் கண்மாய் 37 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய் ஒரு காலத்தில் நகரின் நீர் ஆதாரமாக இருந்தது. பல ஆண்டுகளாக நகரின் ஒட்டுமொத்த சாக்கடை கழிவுகளும் கண்மாயில் வந்து கொண்டிருந்தது. சாக்கடை, திடக் கழிவுகளும் கண்மாயில் கலந்ததால் கண்மாய் சுற்றியுள்ள பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசியது. காற்று அடித்தாலோ லேசான மழை பெய்தாலோ துர்நாற்றத்தால் அப்பகுதியில் நடமாட முடியாது.

சில நாட்களில் கழிவு நீருடன் ரசாயன கழிவு கலந்து நுரை, நுரையாக மிதக்கும். இதுபோன்ற நாட்களில் அப்பகுதியில் யாரும் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. கண்மாயில் கழிவுநீர் சேராமல் தடுத்து, மழைநீர் வரும் வகையில் நடவடிக்கை எடுத்தால்தான் திருத்தங்கல்லை மாசில்லா நகராக மாற்ற முடியும் என்பது திருத்தங்கல் மண்டல மக்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலோடு தனியார் அமைப்புகள் மூலம் இந்த கண்மாயை தூர்வார முடிவு செய்தன. அதனை தொடர்ந்து செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

மண் அள்ளும் கிட்டாச்சி, ஜேசிபி உதவியுடன் டன் கணக்கில் கழிவுகள் அகற்றப்பட்டன. சுமார் 50 ஆண்டுகாலமாக கண்மாய் தூர்வாரப்படாத நிலையில் கண்மாயில் கழிவு மண் அகற்றப்பட்டன. மேலும் கண்மாய் வடக்கு பகுதியின் கரை 9 அடி உயரம் வரை பலப்படுத்தப்பட்டு உள்ளன. கண்மாயில் தெற்கு பகுதியில் குப்பைகள் கொட்ட முடியாத அளவிற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளன. தற்போதுவரை லாரிகள் மூலம் 8 ஆயிரம் யூனிட் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பசுமை மன்றத்தினர் கூறினர்.

இந்நிலையில் செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், திருத்தங்கல் செங்குளம் கண்மாய் மற்றும் கடமங்குளம் கண்மாய் ஆகிய நீர்நிலைகளில் ஹட்சன் நிறுவனத்தின் உடைய சமூக பொறுப்பு நிதியின் கீழ் நீர்நிலை தூர்வாரப்பட்டு சீரமைக்க கூடிய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீர் நிலையை தூர்வாருதல் மட்டுமல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தக்கூடிய வகையில், எந்த வழியில் நீர் வர வேண்டும், வெளியேற வேண்டும் என்றும், கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு எவ்வாறு அதை நன்னீரோடு கலக்காமல் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் சிறந்த மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இந்த பணிகள் நடைபெறுகிறது.

ஒரு மாபெரும் முயற்சியை இந்த திட்டம் உருவாக்கி இருக்கிறது. நம்முடைய பகுதிகளில் வர வேண்டிய இது போன்ற நல்ல திட்டங்களுக்கு இது ஒரு முன்மாதிரியான திட்டம். இது போன்ற பணிகளை முன்னெடுத்து செய்யக்கூடியவர்களுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

ஆய்வின்போது, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், ஹட்சன் நிறுவன உரிமையாளர் சந்திரமோகன், தொழில் அதிபர் அபிரூபன் மற்றும் பசுமை மன்ற நிர்வாகிகள், திமுக மாநகர பகுதி கழக செயலாளர்கள் அ.செல்வம், காளிராஜன், கருணாநிதிப்பாண்டியன், மாவட்ட கழக துணை செயலாளர் ராமமூர்த்தி, மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் கவுன்சிலர் குருசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

The post 8 ஆயிரம் யூனிட் கழிவுகள் வெளியேற்றம் செங்குளம் கண்மாயில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article