பெங்களூரு: மாநிலத்தில் பகர்ஹுகும் திட்டத்தை சரியாக செயல்படுத்தாத தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா எச்சரித்தார். பெங்களூரு விதானசவுதாவில் வருவாய் துறை முதன்மை செயலாளர் உள்பட அதிகாரிகளுடன் நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து பரிசீலனை நடத்தினார்.
அப்போது பகர்ஹுகும் திட்டத்தில் நிலம் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்களை கடந்த டிசம்பர் 15ம் தேதிக்குள் 15 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயம் செய்தும் 5 ஆயிரத்திற்கும் குறைவான விண்ணப்பங்கள் மீது மட்டும் பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டதாக தாசில்தார்கள் தெரிவித்தனர். இதில் கோபமடைந்த அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, பகர்ஹுகும் திட்டத்தில் நிலம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் ஏழை விவசாயிகளாகவும் சொந்தமாக நிலமில்லாதவர்களாக உள்ளனர்.
அவர்களின் சாமானிய கோரிக்கையை கூட சரியான நேரத்தில் தீர்க்காமல் இருப்பது என்ன நியாயம் ? அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளப்படி முடிக்க வேண்டியது தாசில்தாரிகளின் கடமைதானே என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், பகர்ஹுகும் திட்டத்தில் நிலம் கேட்டு விண்ணப்பம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இல்லையெனில் நடவடிக்கை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், தாலுகா தாசில்தார்கள் நீதிமன்றத்தில் 10,774 வழக்குகள் நிலுவையில் இருந்தது. நாங்கள் எடுத்த துரித நடவடிக்கை காரணமாக தற்போது 600 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இதை ஜீரோ நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தாசில்தார்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். போடி திட்டத்தில் தாசில்தார்களிடம் 6,800 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் வருவாய் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்’ என்றார்.
The post பகர் ஹுகும் திட்டத்தை செயல்படுத்தாத தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா எச்சரிக்கை appeared first on Dinakaran.