75 வயதை எட்டுவதால் பாஜ கட்சி மரபுப்படி மோடி செப்டம்பரில் ஓய்வா..? புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆர்.எஸ்.எஸ் தீவிரம்

2 days ago 4

மும்பை: வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது ஆக உள்ளதால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த பிரதமர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருப்பார் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவி ஏற்ற பின்னர் நரேந்திர மோடி முதல் முறையாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு சமீபத்தில் வருகை தந்தார். பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2000ம் ஆண்டு, மறைந்த பிரதமர் வாஜ்பாய் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு வருகை தந்தார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதும் தான் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தார். அதே போல நரேந்திர மோடியும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்னரே ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்.

இது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எம்பி கூறியதாவது:
பிரதமர் பதவி ஏற்ற பின்னர் கடந்த 11 ஆண்டுகாலமாக நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகத்துக்கு வந்ததே இல்லை. இப்போதுதான் முதல் தடவையாக வந்திருக்கிறார். பாரதிய ஜனதா தலைவர்கள் கட்சி மரபுபடி 75 வயதானதும் ராஜினாமா செய்வார்கள். நரேந்திர மோடிக்கும் செப்டம்பர் மாதத்துடன் 75 வயதாகிறது. எனவே செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்வது பற்றி ஆலோசனை நடத்துவதற்காகவே நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டுகிறது. புதிய பிரதமர் யாரென ஆர்.எஸ்.எஸ் தான் முடிவு செய்யும். ஆர்எஸ்எஸ் தேர்வு செய்யும் அடுத்த பிரதமர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருப்பார். பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இவ்வாறு சஞ்சய் ராவத் எம்பி கூறினார். மகாராஷ்டிராவை சேர்ந்தவர்தான் என்று கூறியதன் மூலம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அடுத்த பிரதமராவார் என்று சஞ்சய் ராவத் மறைமுகமாக தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவத்தின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜவில் 75 வயதானதும் தலைவர்கள் அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 2019 மக்களவை தேர்தலின்போது, 75 வயதுக்கு மேற்பட்ட பாஜ தலைவர்களுக்கு பலருக்கு சீட் வழங்க வேண்டாம் என கட்சி முடிவு செய்துள்ளதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். இது ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதால், பாஜவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஸ்வந்த் சின்கா, ரீட்டா பகுகுனா ஜோஷி ஆகியோர் ஓய்வு பெற்றனர். கடந்த மக்களவை தேர்தல்களில், 75 வயதான பாஜ தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டது.

எழுதப்படாத இந்த விதி காரணமாக, கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, ‘பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நரேந்திர மோடி 75 வயதானதும் பதவி விலகுவாரா?’ என்ற கேள்வியை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் உட்பட பலர் எழுப்பினர். அப்போது பாஜ தலைவராக இருந்த ராஜ்நாத் சிங்கிடம் இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர், ‘‘அப்படியொரு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. நான் பாஜ தலைவர் என்ற முறையில் இதனை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

75 வயதானவர்களுக்கு சீட் வழங்க வேண்டாம் என கட்சி முடிவு செய்துள்ளதாக 2019 தேர்தலில் கூறிய அமித்ஷா, மோடி 2029ம் ஆண்டு வரை நாட்டை வழி நடத்துவார் என கடந்த மக்களவை தேர்தலில் தெரிவித்திருந்தார். அப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சஞ்சய் ராவத் எம்பியின் கருத்தால் மீண்டும் இதே சர்ச்சை எழுந்துள்ளது.

The post 75 வயதை எட்டுவதால் பாஜ கட்சி மரபுப்படி மோடி செப்டம்பரில் ஓய்வா..? புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆர்.எஸ்.எஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article