வேலூர், அக்.21: காட்பாடியில் பல்வேறு இடங்களில் 7 லேப்டாப், கம்ப்யூட்டர் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். இவர் தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இதனால் காட்பாடி ஆண்டாள் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இவர் ஆயுத பூஜை விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். விடுமுறை முடித்து கொண்டு கடந்த 13ம் தேதி மீண்டும் காட்பாடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவர் படிப்புக்காக பயன்படுத்திய லேப்டாப் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை எஸ்ஐ மணிகண்டன் தலைமையிலான போலீசார் காட்பாடி அருப்புமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அந்த வழியாக மூன்று நபர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் லேப்டாப் இருந்துள்ளது. மேலும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்பாடி பகுதியை சேர்ந்த குமரன்(35), மணிகண்டன்(40), முரளி(36) என்பதும், இவர்கள் காட்பாடியில் பல்வேறு பகுதிகளில் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 லேப்டாப், 1 கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
The post 7 லேப்டாப், கம்ப்யூட்டர் திருடிய 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை காட்பாடியில் பல்வேறு இடங்களில் appeared first on Dinakaran.