7 ரன்னில் நாட் அவுட் கொடுக்கப்பட்ட ரோகித்.. சர்ச்சையை கிளப்பிய 3-வது நடுவரின் முடிவு

10 hours ago 3

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 7 ரன்னில் ஆடி கொண்டிருந்தபோது பசல்ஹாக் பரூக்கி வீசிய 2-வது ஓவரின் 5 வது பந்தில் கள நடுவரால் எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்பட்டார். அதன் பின் ரோகித் சர்மா எதிரில் நின்றிருந்த ரியான் ரிக்கல்டனுடன் டிஆர்எஸ் எடுப்பது பற்றி விவாதித்து, பின்னர் ரிவியூ முடிவை எடுத்தார்.

ஆனால், டிஆர்எஸ் முடிவை எடுப்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக நேரம் முடிவடைந்த பின்னரே ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதனால் நடுவர் ரோகித் சர்மாவின் அப்பீலை நிராகரித்து இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் ரிவியூவின்போது மற்றொரு சர்ச்சை எழுந்தது. ரிவியூவில், பந்து கோட்டிற்கு உள்ளே பாதியளவும் வெளியே பாதி அளவுக்கு பிட்சானதும் தெரிந்தது. இதனால் 3-வது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார். ரிவியூவில், பந்து 50 சதவீதம் கோட்டிற்கு உள்ளேயும் 50 சதவீதம் வெளியேயும் பிட்சானதாகவே தெரிந்தது. இருப்பினும் கள நடுவரின் முடிவை ஆதரித்தே 3-வது நடுவர் அவுட் வழங்குவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article