சென்னை: தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை 2 கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.
இவற்றோடு, வேகமாக நகரமயமாகி வரும் வளச்சியடைந்து வரும் பெரும்பாலான சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி மற்றும் இடப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிப் பணிகள், சேவைகளுக்கான விரைவான, திறம்பட்ட செயலாக்கத்திற்கான பொறியாளர்கள் உள்ளிட்ட தேவையான பணியமைப்பு குறைந்த அளவிலேயே உள்ளது போன்றவற்றை களையவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
The post 7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.