6ம் தேதி பிரதமர் மோடி வருகை: சிறப்பு பாதுகாப்பு குழு ராமேஸ்வரத்தில் ஆய்வு

21 hours ago 3

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் 6ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின் பேருந்து நிலையம் அருகே ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்ட மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதையொட்டி பிரதமர் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முதற்கட்டமாக ஆய்வு செய்தனர். இதில் பிரதமர் வந்திறங்கும் மண்டபம் ஹெலிபேட் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும் பிரதமர் வந்து சொல்லும் வழித்தடங்களை பார்வையிட்டு தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (ஏப். 3) ராமேஸ்வரத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பிரதமரின் பாதுகாப்புக்கு தேவையான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால், இன்று முதல் ராமேஸ்வரம் தீவு முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. அதேபோல், தேசிய வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக 30க்கும் மேற்பட்ட பிரதமரின் வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

The post 6ம் தேதி பிரதமர் மோடி வருகை: சிறப்பு பாதுகாப்பு குழு ராமேஸ்வரத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article