சிற்பமும் சிறப்பும்
காலம்: பொ.ஆ.864 இல் பௌமா வம்சத்தின் இரண்டாம் சாந்திகரதேவா என்றழைக்கப்படும் லோனபத்ரா மன்னரின் ராணி ஹிராதேவியால் கட்டப்பட்டது.
ஆதிசக்தியின் தெய்வீக அம்சமாக கருதப்படும் 64 ‘யோகினி’கள், ஒவ்வொருவரும் தனித்துவமான தன்மைகளைக் கொண்டவர்கள். யோகினி சிற்பங்கள் பெரும்பாலும் ஒரு விலங்கு (வாகனம்) அல்லது ஒரு அரக்கன் மீது நின்ற தெய்வீக உருவங்களாக சித்தரிக்கப் படுகின்றன.
சக்தி, தைரியம், அச்சமற்ற தன்மை, வீரம் ஆகியவை யோகினியின் சில பொதுவான குணாதிசயங்கள். வளம், ஞானம், சக்தி, வளர்ச்சி, நீண்ட ஆயுள், நல்வாழ்வை மேம் படுத்தும் ஆற்றல்கள் ஆகியவற்றை யோகினி வழிபாடு அளிக்குமென நம்பப்படுகிறது.பண்டைய பாரதத்தில் பொ.ஆ. 8-12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய இந்தியாவில் யோகினி வழிபாட்டு முறை செழித்தோங்கியது.
அக்கால கட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பல ‘சௌசத் யோகினி’ (Chausath – 64 எண்ணுக்கான வடமொழிச் சொல்) ஆலயங்களுள் தற்போது நான்கு பெரும் ஆலயங்களே உள்ளன. அவற்றுள் மிகப் பழமையாகக் கருதப்படுவது ஒடிசா மாநிலத்தில் ஹிராபூரில் அமைந்துள்ள ‘சௌசத் யோகினி மந்திர்’ (‘மகாமாயா கோயில்’ அல்லது 64 – யோகினி கோயில்) ஆகும். வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயம் பரப்பளவில் சிறியது. வட்ட சுற்றுச் சுவரின் உட்புறத்தினுள் இரண்டு அடி உயரம் கொண்ட 64 மாடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தேவியின் சிற்பம் உள்ளது. கருங்கல்லால் செய்யப்பட்ட 64 சிற்பங்களில், பெருமளவு அன்னியர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டு, இப்போது 56 மட்டுமே எஞ்சியுள்ளன.
ஒவ்வொரு யோகினியும் கழுத்தணிகள், கொலுசுகள், காதணிகள், வளையல்கள், மாலைகள், கவசங்கள் போன்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.கோயிலுக்கு வெளியே, ஒரு அழகிய புஷ்கரணி (கோயில் குளம்) நடுவில் ஒரு நீராழி மண்டபத்துடன் உள்ளது.அமைவிடம்: சௌசத் யோகினி மந்திர் (64 யோகினி கோயில்), ஹிராபூர், ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ.
தொகுப்பு: மது ஜெகதீஷ்
The post 64 யோகினி கோயில் appeared first on Dinakaran.