6 மாதங்களுக்கு முன்பு போலீசுக்கு தெரியாமல் புதைப்பு சிறுமியின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

18 hours ago 2

*வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி : வந்தவாசி அருகே போலீசாருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் 6 மாதங்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த படூர் கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை(33). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு 17 வயதாகிறது. இளைய மகள் துர்கா(14).

அமரேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அஞ்சலை அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(27) என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் 9 வயது மகள் உள்ளார். தம்பதி இருவரும் விறகு வெட்டும் தொழிலாளர்கள் என்பதால், செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் ரைஸ்மில்லில் தங்கி கூலி வேலை செய்துவந்தனர். 3 மகள்களும் மூடூர் கிராமத்தில் சித்தேரி பகுதியில் வசிக்கும் அஞ்சலையின் தந்தை ஜெயராமன், மனைவி நாகம்மா ஆகியோரின் பராமரிப்பில் உள்ளனர்.

3 பேரும் அருகே உள்ள அமுடூர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தனர். இந்நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் துர்கா கடந்த அக்டோபர் 14ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிபோது, தனது அக்காவிடம், ‘விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்து சாப்பிட்டு விட்டேன்’ என கூறினாராம். பின்னர் வீட்டில் மயங்கி விழுந்து பலியானதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் உறவினர்கள் அங்குள்ள ஏரிக்கரையில் சடலத்தை புதைத்துள்ளனர்.

இதுகுறித்து தெள்ளாரில் உள்ள தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், திருவண்ணாமலை எஸ்பி, பழங்குடியினர் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தார். அதில் மாணவியை கேலி கிண்டல் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் விஷம் குடித்து இறந்தார் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் தெள்ளார் போலீசார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து நேற்று தாசில்தார் பொன்னுசாமி, டிஎஸ்பி தீபக் ரஜினி, தெள்ளார் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கும் பணி நடந்தது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின், உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி தெரிவித்தார். 6 மாதங்களுக்கு முன்பு இறந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 6 மாதங்களுக்கு முன்பு போலீசுக்கு தெரியாமல் புதைப்பு சிறுமியின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை appeared first on Dinakaran.

Read Entire Article