
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 6-ந்தேதி நேரில் வந்து திறந்து வைக்கிறார்.
திறப்பு விழாவை முன்னிட்டு 4-வது முறையாக நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையை பார்வையிட சென்னையில் இருந்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வந்திருந்தார். பாம்பன் ரோடு பாலத்தில் அமைத்திருந்த தற்காலிக மேடையில் நின்றபடி புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். அவரது முன்னிலையில் கொடி அசைக்கப்பட்டதும், பயணிகள் இல்லாத 16 பெட்டிகளுடன் கூடிய ரெயிலானது பாம்பன் பாலத்தில் வந்தது. தூக்குப்பாலத்தையும் கடந்து ராமேசுவரம் நோக்கி சென்றது.
இதை தொடர்ந்து பழைய மற்றும் புதிய தூக்குப்பாலங்கள் திறக்கப்பட்டன. இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், தூக்குப்பாலத்தின் வழியாக ரெயில் பாலங்களை கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வந்தது. மீண்டும் சிறிது நேரத்தில் அதே கப்பல் தூக்குபாலத்தை கடந்து மண்டபம் நோக்கி சென்றது. இவ்வாறு ஒத்திகை நடத்தப்பட்டது.
பாம்பன் பாலம் திறப்பு விழா நாளான வருகிற 6-ந்தேதி, பிரதமர் மோடி மண்டபம் முகாம் பகுதியில் உள்ள தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக பாம்பன் ரோடு பாலம் வருகிறார். அங்கிருந்து மேடையில் நின்றபடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். ராமநவமி நாளில் பாலம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அங்கிருந்து காரில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு செல்கிறார். அனைத்து சன்னதிகளுக்்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மீண்டும் அங்கிருந்து காரில் பஸ் நிலையம் அருகே கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும் விழாவுக்கு வந்து, பாம்பன் ரெயில் பாலம் குறித்த கல்வெட்டுகளை திறந்து வைத்து பேசுகிறார்.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் வருகையையொட்டி பாம்பன், ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.