
பாரிஸ்,
பாரிஸ் நகரில் உள்ள 500 தெருக்களில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் செல்ல தடை விதிக்க பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் வகையில், இந்த திட்டம் குறித்து இன்றைய தினம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பாரிஸ் நகரில் 3-வது முறையாக இவ்வாறு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு எலக்ட்ரிக் பைக்குகளை தடை செய்வது தொடர்பாகவும், கடந்த ஆண்டு எஸ்.யூ.வி.(SUV) ரக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை 3 மடங்காக உயர்த்துவது தொடர்பாகவும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஏற்கனவே பாரிஸ் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில் கார்கள் செல்ல அனுமதி இல்லை என்ற நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அங்கு காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் சைக்கிள் மற்றும் பொதுப்போக்குவரத்தை உபயோகிக்க மக்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.