
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் "பேட்ஆப், சோர், சாம்பியன்ஸ், ஹீரோஸ், ரைட் யா ராங், த மேன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் 'ஜாத்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சன்னி தியோல், தென்னிந்திய சினிமாவிடம் இருந்து அன்புடன் சினிமாவை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் பாலிவுட் சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, "தென்னிந்தியாவில் உள்ள தயாரிப்பாளர்கள் இயக்குனரை நம்புகிறார்கள், அவரது தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கையைக் காட்டுகிறார்கள், கதைதான் அவர்களுக்கு ஹீரோ. அவர்கள் அனைவருடனும் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். தயாரிப்பாளர்கள் இயக்குனருக்கு அனைத்து சுதந்திரத்தையும் கொடுக்கின்றனர். இதனால் அவர்களால் உருவாகும் படம் மேன்மையாக உள்ளது. எனவே தென்னிந்திய சினிமாவை பார்த்து பாலிவுட் சினிமா பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.