
புதுடெல்லி,
எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கு, வருமான வரி சட்டத்தின் பிரிவு 48-ன் கீழ், செலவு பணவீக்க குறியீடு அடிப்படையில், சம்பளம், தினப்படி, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த சம்பள உயர்வானது, 2023, ஏப்ரல் 1-ந்தேதியை கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ரூ.1 லட்சம் சம்பளம் பெறும் எம்.பி. ஒருவர் இனி, ரூ.1.24 லட்சம் சம்பள தொகையாக பெறுவார். அவருடைய தினப்படி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதேபோன்று, முன்னாள் எம்.பி.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு கூடுதலாக பதவியில் இருந்த எம்.பி.க்களுக்கு, அவருடைய சேவையை கணக்கில் கொண்டு ஒவ்வோர் ஆண்டுக்காகவும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதுதவிர, ஆண்டுதோறும் தொலைபேசி மற்றும் இணையதள பயன்பாடு ஆகியவற்றுக்காக எம்.பி.க்களுக்கு கூடுதல் படிகளும் கிடைக்கப்பெறும்.
கர்நாடக சட்டசபையில், முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு அளிப்பதற்கான மசோதா நிறைவேறிய சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதனால், கர்நாடகாவில், முதல்-மந்திரியின் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் என்ற அளவில் இருக்கும். மந்திரிகளுக்கு 108 சதவீதம் என்ற அளவில் சம்பளம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் ஆக அதிகரிக்கும்.