5 லட்சம் பனை விதை நடும் பணி விறுவிறுப்பு

3 weeks ago 5

முசிறி, அக்.21: திருச்சி மாவட்டம், முசிறி அருகே நெய்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியினை துவங்கி அதனை செயல்படுத்தி வரும் நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரை அப்பகுதியில் பனை லோகநாதன் என்று கூறினால்தான் தெரிகிறது. அந்த அளவிற்கு பனை மரத்தின் மீது மிகுந்த காதலும், அதனை வளர்க்கும் வேட்கையும் கொண்டு செயல்பட்டு வருகிறார். பனை லோகநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் பகுதிகளில் 5 லட்சம் பனை விதைகளை நட்டு முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதனை செயல்படுத்தும் முயற்சியாக தற்போது திருத்தியமலை, பாலப்பட்டி, சுக்காம்பட்டி, ராயப்பட்டி, காமாட்சிப்பட்டி, மூவானுர், நெய்வேலி, சின்ன வேளகாநத்தம், பெரிய வேலைக்காநத்தம், ஆனைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 75 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளனர். கையிருப்பாக தற்போது சுமார் ஒன்றரை லட்சம் பனை விதைகளையும் வைத்திருக்கின்றனர். பனை விதைகளை நடும் இளைஞர் பட்டாளத்திற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் உதவுகின்றனர்.

இதுகுறித்து பனை லோகநாதன் கூறும்போது, நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. அதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக மழை பொலிவிற்கு மிகுந்த ஆதாரமாக திகழும் பனை மரத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக செயலில் இறங்கியுள்ளோம். பனைமரம் என்பது நீர் ஆதாரத்தை காக்கக்கூடியது மழையை ஈர்த்து தரக்கூடியது. பனை மரத்திலிருந்து எண்ணற்ற பலன்களை மனிதர்கள் பெறுவதற்கு இயலும்.

நுங்கு, பனங்கற்கண்டு, பனை ஓலை,பதநீர்,பனைவெல்லம் என சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பயன்களை மனிதர்களுக்கு தரும் பனைமரம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். 5 லட்சம் விதைகளை நடுவதால் முளைத்து எழும் பனை மரங்கள் எனது சந்ததியை காக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.அதன் முயற்சியாக இப்பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் செந்தில்குமார், சீனிவாசன், சூர்யா, குமார், சக்திவேல், சஞ்சய் ,சுகுமார் உள்ளிட்ட பல சமூக நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியோடு பனை விதைகளை நட்டு வருகிறோம். கண்டிப்பாக 5 லட்சம் பனை விதைகளை நட்டு, இலக்கை முடிப்போம். தற்போது பனை விதைகளை சேகரிக்க வாகன வசதி தேவைப்படுகிறது.

லோடு ஆட்டோ கிடைத்தால் அதில் சென்று தற்போது பனை மரத்திலிருந்து உதிர்ந்துள்ள பனை விதைகள் வீணாகும் முன் அதனை சேகரித்து விடுவோம். சமூக எண்ணம் கொண்டவர்கள் உதவ முன் வரவேண்டும் என்றார். இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களுக்கு தேவையான உதவியை மாவட்ட நிர்வாகம் உதவி செய்து கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

The post 5 லட்சம் பனை விதை நடும் பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article