புதுடெல்லி: நாடு முழுவதும் 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசும் என்ற தகவல் பரவியதை தொடர்ந்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருவதுமாக இருக்கிறது. அதேசமயத்தில் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் வருகிற 29ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை வெயில் 113 டிகிரி முதல் 131 டிகிரி வரை கொளுத்தும் என்றும் அந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனை குறிப்பிட்டு பொதுமக்களுக்கு ஒன்றிய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும். வீடுகளில் கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அதிக வெப்பத்தால் செல்போன்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். தயிர், மோர், பழச்சாறு உள்ளிட்ட பானங்களை அதிகம் பருக வேண்டும். காஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்க வேண்டாம். பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பி வைக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘’இதுபோன்ற தகவல்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசுமா?.. ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.