5 கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலம் பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா: 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

3 hours ago 3

திருவள்ளூர், ஜன.18: பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா நடந்தது. இதில், 5 கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மேலும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து திருவிழா வெகுசிறப்பாக நடந்தது. ஆண்டுதோறும் உழவர் திருநாள், காணும் பொங்கல் அன்று பேரம்பாக்கத்தில் கிராம மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பாரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உழவர் திருநாள் அதனை தொடர்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இதில், பேரம்பாக்கம் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் அருகே உள்ள திடலில் பேரம்பாக்கம் காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர், பாலமுருகர், களாம்பாக்கத்தில் இருந்து மரகதவல்லி சமேத திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்திலிருந்து முருகர், சிவபுரம் கிராமத்திலிருந்து குருந்த விநாயகர், மாரிமங்கலம் கிராமத்திலிருந்து சிவமாரி நாராயணி அம்மன் உள்பட 5 கிராமங்களில் இருந்து சுவாமி சிலைகள் வண்ண, வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அனைத்தும் ஒரே வரிசையில் நின்றன.

பின்னர் அனைத்து சாமிகளும் முன்னும், பின்னும் அசைந்தாடி பாரிவேட்டை திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து, அனைத்து சாமிகளும் அணிவகுத்தவாறு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சியளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருவள்ளூர், மப்பேடு, காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லி, சென்னை, திருவாலங்காடு என பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்தனர். உழவர் திருநாளை முன்னிட்டு கிராம மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த பாரிவேட்டை திருவிழா வெகுசிறப்பாக நடந்தது.

மேலும், விழாவில் திமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் ஆதிசேஷன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களம்பாக்கம் பன்னீர்செல்வம், ராஜ்குமார், அரிமா சங்க நிர்வாகிகள் ஆர்.சேகர், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி தலைமையில் மப்பேடு போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 5 கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலம் பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா: 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article