புதுடெல்லி,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கே.டி.சி. நகர், கீழநத்தம், திருநெல்வேலி டவுன் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கரைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
தென்காசியில் குளம் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக செங்கோட்டை - கேரளா சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 16-ம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.