40 ரூபா தேங்காயை 90 ரூபாய்க்கு வாங்கினதா கணக்குக் காட்டி பல லட்சங்களை சுருட்டிய ஜெயில் அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 weeks ago 2

‘‘கைதிகளுக்கு உயர் ரக தேங்காயில் சட்னி அரைத்த ஜெயில் அதிகாரிகள், உச்ச பதவிக்கு போக முடியாத சிக்கலில் மாட்டியிருக்காங்களாமே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகிப் போனதாக அதிகாரிகளிடையே பேச்சு எழுந்திருக்காம்.. சென்னை சிறையின் உச்ச அதிகாரி ஒரு ஐபிஎஸ் அதிகாரியாம்.. ஊழலுக்கு எதிரான அவரது என்கொயரியில் பல்வேறு மோசடிகள் தெரிய வந்துச்சாம்.. தூங்கா நகரத்து மோசடியில் சிபிசிஐடி விசாரணையில பலகோடி லபக்கியது தெரியவந்துச்சாம்.. அவர்களில் 3 முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு பாய்ந்த நிலையில் இன்னும் சஸ்பெண்ட் கூட ஆகலயாம்.. அதிலுள்ள சிலர் தங்களின் பவர் என்னன்னு காட்டாம போகமாட்டேன்னு சபதம் செஞ்சதா சொல்றாங்க.. வேலூரில் சிக்கிய அந்த பெண் உயரதிகாரி, விருப்ப ஓய்வில் டிபார்ட்மெண்டில் இருந்து வெளியேற முடிவு செஞ்சியுள்ளதா பேசிக்கிறாங்க.

இவ்வளவு நெருக்கடியான நிலையில இருக்கும் நேரத்துல தேங்காய் ஊழலும் சிக்கியிருக்காம்.. புழல் ஜெயிலில் இலைகட்சி ஆட்சியில் அதிகாரிகளும் கொடிகட்டி பறந்திருக்காங்க.. இதனால 40 ரூபாய் மதிப்புள்ள ஒரு தேங்காய் ₹90க்கு வாங்கி, கைதிகளுக்கு சட்னி அரைச்சு போட்டதா பில் எழுதியிருக்காங்க.. ஒரு தேங்காய் விலை 90 ரூபாயான்னு விசாரிச்ச அதிகாரிகள் வாயடைச்சிப் போயிட்டாங்களாம்.. தேங்காய் மூலம் மட்டும் ₹37 லட்சத்தை உடைச்சி சாப்பிட்டிருப்பதா சொல்றாங்க.. இவ்வாறு அடுக்கடுக்கான புகார்களை பார்த்த அந்த ஐபிஎஸ் அதிகாரி, பதவி உயர்வில் இருந்த 6 பேருக்கு மெமோ கொடுத்திட்டாராம்.. சமீபத்தில் கூட ஒரு அதிகாரி சஸ்பெண்ட் ஆகியிருக்காரு.. இவ்வாறு பதவி உயர்வில் இருந்தவர்கள் உச்ச பதவிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்காம்.. சூப்பிரெண்ட் பதவி உயர்வில் இருந்த 2 பேரும் இதில் சிக்கியிருப்பதால் அவர்களும் கடும் திணறலுக்கு ஆளாகியிருக்காங்களாம்..

மேலும் சென்னை சரக டிஐஜி பதவிக்கு ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காம்.. இதனால் தங்களின் பதவிகள் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஜெயில் அதிகாரிகள் புலம்புறாங்களாம்.. எனவே அந்த அதிகாரி எப்போது காவல் டிபார்ட்மெண்டுக்கு போவாருங்கிற எதிர்பார்ப்போட இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அடுத்தக்கட்ட நகர்வு சொதப்பலா அமைந்துவிடக்கூடாது என தொகுதி வாரியாக பல்ஸ் பார்க்கும் வேலையில் இறங்கிட்டாராமே சின்ன மம்மி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் மீண்டும் இணைவதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை சின்னமம்மி மேற்கொண்டாங்க.. ஆனால், எதுவும் எடுபடவில்லை.. தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றுப்பயணமும் பெரிய அளவுக்கு அவருக்கு கைகொடுக்கவில்லை..

இதன் காரணமாக அடுத்தக்கட்ட நகர்வு, சொதப்பலாக அமைந்து விடக்கூடாது என்பதில், சின்னமம்மி ரொம்பவும் கவனமாக இருந்து வருகிறாராம்.. முதலில், டெல்டாவில் தனக்கு எந்தெந்த பகுதியில் ஆதரவாளர்கள் இருக்காங்க.. தற்போது, அவர்களின் எண்ணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறாராம்.. தொடர்ந்து, தனக்கு ஆதரவு உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளலாம்னு அவர் நினைத்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குண்டர் சட்டம் பாயுதே என சாராய வியாபாரிகள் ஓட்டம் பிடிப்பதற்கு பதிலாக, காக்கிகள் தான் குதிரையோட்டம் ஓடுறாங்களாமே என்ன விஷயம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விஷசாராய பலியை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை ஒடுக்க கடும் நடவடிக்கையில் இறங்கினர் உயர் அதிகாரிகள்..

இதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதுமுள்ள சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ் தடாலடியாக பாய்ந்தது. 65க்கும் மேற்பட்டோர் மீது கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகள் சம்பந்தமாக குண்டாசில் ஓராண்டு கைது நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதாம்.. ஒவ்வொரு குண்டாஸ் வழக்கு பதிவுக்கும் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் உள்ள சி2 பிரிவிற்கு ‘ப விட்டமின்’ தாராளமாக வழங்க வேண்டி இருக்கிறதாம்.. அடுத்ததாக புக்லிட், சிடி பைல், ஜெராக்ஸ் என ஒரு வழக்கிற்கே கணிசமான தொகை செலவு செய்ய வேண்டி உள்ளதால் புலம்பி வருகிறார்களாம் அம்மாவட்ட காக்கிகள்.. இதன் காரணமாக குண்டாஸ் என்றாலே குதிரை ஓட்டம் பிடிக்கிறார்களாம் காக்கிகள்.. இதனால் உள்ளூர் சாராய வியாபாரிகள் குஷியில் இருப்பதுதான் தற்போதைய ஹைலெட்.. என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத தேசிய கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு கடும் குஸ்தியாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..இந்த கட்சிக்கு நாட்டின் தென்கோடி முனையான மாவட்டத்தை சேர்ந்த பொன்னார் அதிக காலம் மாநில தலைவராக பதவி வகித்தாராம். அதன் பிறகு வந்த பெண் தலைவரும் தலைநகரில் செட்டில் ஆனாலும் தென் கோடி மாவட்டத்தை சேர்ந்தவர் தானாம். அதற்கு பிறகு அந்த பதவியை மலையான தலைவர் தட்டிச் சென்று விட்டார். தற்போது மாநில தலைவருக்கான ரேசில் அல்வா மாவட்ட எம்எல்ஏவும், பெண் தலைவரும் கோதாவில் குதித்துள்ளனர். மலையான தலைவரின் பதவி பறிபோனால் எப்படியாவது மாநில தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என்பதில் அல்வா மாவட்ட எம்எல்ஏ குறியாக இருக்கிறாராம். அதற்காக தான் இலை கட்சித் தலைவருடன் பேசினால் கூட்டணி கசிந்து விடும் என்றாராம்.

இதன் மூலம் ஏற்கெனவே அறுந்து போன இலையை தான் ஒட்ட வைப்பேன் என்பதை சூசகமாக எம்எல்ஏ வெளிப்படுத்தினாராம். மாநில தலைவர் பதவியை கைப்பற்ற எம்எல்ஏ போடும் கணக்கு சரியாகுமா, தப்பாகப் போகுமா என அல்வா மாவட்ட தேசிய கட்சியினரிடம் பெரிய விவாதமே நடக்கிறது..’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

The post 40 ரூபா தேங்காயை 90 ரூபாய்க்கு வாங்கினதா கணக்குக் காட்டி பல லட்சங்களை சுருட்டிய ஜெயில் அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article