காட்டுமன்னார்கோவில், ஜன. 26: சிறுகாலூர் ஊராட்சியில் 40 ஏக்கர் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே பொது வழி அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுகாலூர் ஊராட்சி மணகுடியான் இருப்பு சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 300 ஏக்கர் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, பழனிவேல், சத்தியமூர்த்தி, கர்ணன், நடனசபாபதி, பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மணகுடியான் இரும்பு பகுதியில் சுமார் 40 ஏக்கர் சாகுபடி செய்துள்ளனர்.
இவர்களது வயலில் நெல் அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதே பகுதியை சேர்ந்த தனி நபரின் 2 ஏக்கர் நிலத்தை கடந்து செல்ல வேண்டும். ஆனால் அந்த தனிநபர் இதற்கு வழி தராததால் இவர்களது வயலில் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ள குன்னம் வாய்க்காலை அளவீடு செய்து வழி அமைத்து தர பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அந்த தனிநபர் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மனமுடைந்த விவசாயிகள் முதல்வர் தனி பிரிவுக்கும், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள 40 ஏக்கர் நெல் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. மீண்டும் ஒரு மழை பெய்தால் கூட நெல் முளைத்து விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த தனிநபர் குடும்பத்தினரின் 2 ஏக்கரை கடந்து எங்கள் நிலங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலத்தை கடந்து செல்ல தனிநபர் மறுத்து வருவதால் இதுவரை எங்களது நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை. கடந்த 2 வருடமாக இந்த வழியை பயன்படுத்த மறுத்து அவர்களும் அறுவடை செய்யாமல் எங்களையும் செய்ய விடாமல் தடுக்கின்றனர். கடந்த ஆண்டு 5 கிலோமீட்டர் சுற்றி வந்து அறுவடை செய்ததால் நஷ்டம் ஏற்பட்டது.
நேற்று கிராம நிர்வாக அலுவலர் ராஜவிஸ்வநாதன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதற்கும் அவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் உள்ள குன்னம் வாய்க்காலை அளவீடு செய்து பொதுவழி அமைத்து தர வேண்டும். இல்லை என்றால் வாங்கிய கடனுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’
என்றனர்.
The post 40 ஏக்கர் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு appeared first on Dinakaran.