
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது சமீபத்திய படமான 'தொடரும்' பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. மலையாள சினிமா வரலாற்றில் 4-வது பெரிய ஹிட் படமாக இது மாறியுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 14 நாட்களில் மலையாளத்தில் ரூ.87 கோடி வசூலித்து பகத் பாசிலின் 'ஆவேஷம்' மற்றும் பிருத்விராஜின் 'ஆடு ஜீவிதம்' ஆகிய படங்களில் வசூலை முந்தி அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆவேஷம் படம் ரூ. 85.15 கோடியும் ஆடு ஜீவிதம் ரூ. 85 கோடியும் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. '2018', 'எல் 2: எம்புரான்' மற்றும் 'மஞ்சுமல் பாய்ஸ்' ஆகிய படங்கள் இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.