புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடந்த 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 4 தொகுதியில் பாஜ தோல்வி அடைந்தது. குஜராத், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. குஜராத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜவும், ஆம் ஆத்மி கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத்: குஜராத்தின் காடி தனித்தொகுதியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குமார் 99,742 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 39,452 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 60,290 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பாய் சாவ்தா இரண்டாம் இடத்தையும், 3090 வாக்குளைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியின் சாவ்தா ஜகதீஷ்பாய் கன்பத்பாய் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
குஜராத்தின் மற்றொரு தொகுதியான விசாவதாரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜ வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜ வேட்பாளர் கிரித் படேல், 58,388 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர்நிதின் ரன்பாரியா 5501 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
பஞ்சாப்: பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள பாஜ வேட்பாளர் ஜீவன் குப்தா 20,323 வாக்குகளையும், சிரோமணி அகாலிதளத்தின் வேட்பாளர் பருப்கர் சிங் குமான் 8,203 வாக்குகளையும் பெற்றனர்.
கேரளா: கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அர்யாதன் சவுகத் 77,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஸ்வராஜைவிட 11,077 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஸ்வராஜ் 66,660 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜ வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 8,648 வாக்குகளுடன் 4ஆம் இடம் பிடித்துள்ளார். அன்வர் என்ற சுயேட்சை வேட்பாளர் 19,760 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மேற்குவங்கம்: மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிபா அகமது 1,02,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜ வேட்பாளரை விட 50,049 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். பாஜ வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் 52,710 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கபில் உத்தின் ஷேக் 28,348 வாக்குகள் பெற்றுள்ளார்.
2007 முதல் பா.ஜ தோல்வி
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 2022ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ 156 இடங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்திய போதும், 2007ஆம் ஆண்டு முதல் விசாவதார் தொகுதியில் பா.ஜவால் வெற்றி பெற முடியவில்லை. 2022 ஆம் ஆண்டு தேர்தலில் விசாவதார் தொகுதியில் வென்ற ஆம்ஆத்மி எம்எல்ஏ பூபேந்திர பயானி ராஜினாமா செய்து ஆளும் பாஜவில் இணைந்ததால், அந்த தொகுதி காலியாகியது. தற்போது அங்கு மீண்டும் ஆம்ஆத்மி வென்றுள்ளது.
குஜராத்தில் இனிமேல் பா.ஜ, ஆம்ஆத்மி தான்: கெஜ்ரிவால் உற்சாகம்
குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியால் கெஜ்ரிவால் உற்சாகம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ குஜராத் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியானது 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான அரையிறுதி. வாக்காளர்கள் பா.ஜ மற்றும் காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்பார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறிதான் இந்த வெற்றி. 2027ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதாக அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் குஜராத்தில் எங்கள் வெற்றி மக்கள் 30 ஆண்டுகால பாஜ ஆட்சியால் சலிப்படைந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இப்போது ஆம் ஆத்மியை நம்பகமான மாற்றாகப் பார்க்கிறார்கள். ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸ் தலைமை பாஜவுக்கு எவ்வாறு உதவியது என்பதை இந்த இடைத்தேர்தல்கள் காட்டுகின்றன. காங்கிரஸ் பாஜவின் கைப்பாவையாக மாறிவிட்டது. இதை உணர்ந்து ஆம் ஆத்மியில் சேருமாறு நான் காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன். குஜராத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜவிற்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது என்பதைக் குறிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆளும் பா.ஜவுடன் நேரடி உறவை வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி அளித்ததன் மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பணிகளுக்கு பஞ்சாப் மக்கள் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளனர்’ என்றார்.
பினராயி விஜயனுக்கு 4வது தோல்வி
கேரளாவில் ஆளும் எல்டிஎப் கூட்டணி வசம் இருந்த நீலம்பூர் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கைப்பற்றி உள்ளது. இதன்மூலம் பாலக்காடு, புதுப்ள்ளி, திருக்காக்கரா தொகுதிகளை தொடர்ந்து 4வதாக நீலம்பூர் தொகுதியிலும் பினராயி விஜயன் தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்து உள்ளது. குறிப்பாக, எல்.டி.எப் வசம் இருந்த ஒரு தொகுதியை இழப்பது இதுவே முதல் முறை.
The post 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் 4 தொகுதியில் பாஜ தோல்வி appeared first on Dinakaran.