![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39008143-inda.gif)
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்திருந்தாலும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுயது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியின்போது முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் நீக்கப்பட்டார்.
இந்த சூழலில் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் சாம்பியன்ஷிப் டிராபியில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பும்ராவுக்கு பதிலாக ஹர்சித் ராணா இந்தியா அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரானடி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பும்ரா விளையாடாமல் இருந்தநிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இருந்தும் பும்ரா விலகி உள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி .ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022-ஐயும் பும்ரா தவறவிட்டார், 31 வயதான அவர் முதுகு காயத்தால் தவறவிட்ட இரண்டாவது ஐ.சி.சி. போட்டி இதுவாகும்.