
ஜெய்ப்பூர்,
4 நாட்கள் பயணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்தார். அவரது மனைவியும் இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் இந்தியா வந்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பை அடுத்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் ஜெய்ப்பூர் சென்று, அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், தாஜ்மகாலுக்கு சென்ற அவர், குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானத்தில் வாஷிங்டனுக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.