4-1 என தொடரை வென்றது இந்தியா; ரிஸ்க் அதிகமாக எடுக்கும் போது பலன்களும் அதிகமாக கிடைக்கும்: கேப்டன் சூர்யகுமார் பேட்டி

2 hours ago 1

மும்பை: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5வது மற்றும் கடைசி டி.20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 54 பந்தில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 135, சிவம் துபே 13 பந்தில் 30 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 35 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு இங்கிலாந்து சுருண்டது. இதனால் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்று 4-1 என தொடரை கைப்பற்றியது. அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதும், 5 போட்டியில் 14 விக்கெட் எடுத்த வருண் சக்ரவர்த்தி தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், “களத்தில் நிற்கும் போது மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை சரியாக செய்கிறோம். இந்த ஸ்டைலில் தான் விளையாட விரும்புகிறோம். இனி இதுதான் எங்களுடைய ஸ்டைல். இதை நாங்கள் தொடர்ந்து பாலோ செய்வோம். ரிஸ்க் அதிகமாக எடுத்தால் அதற்கான பலன்களும் அதிகமாக கிடைக்கும். அபிஷேக் குடும்பத்தினரை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். அவர்கள் இந்த ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள. வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பந்துவீச்சு மட்டும் அல்லாமல் பீல்டிங்கிலும் கடுமையாக உழைத்து வருகிறார்’’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், “தொடரை இழந்தது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. தோல்வியை தழுவினாலும் இதே போன்ற அதிரடி ஆட்டத்தை விளையாட வேண்டும் என எங்களுக்குள் நாங்களே உறுதி கொண்டிருக்கின்றோம். இந்தியா ஒரு பிரமாதமான அணி. சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். நான் என் வாழ்நாளில் பல போட்டியை பார்த்திருக்கிறேன். அதில் அபிஷேக்கின் இன்றைய இன்னிங்ஸ் தான் நான் பார்த்ததில் சிறந்த ஒன்று’’ என்றார். அடுத்ததாக இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி நாக்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

குரு யுவராஜ் மகிழ்ச்சி அடைந்திருப்பார்;
ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கூறுகையில், “இது என் ஸ்பெஷல் இன்னிங்சில் ஒன்று. நாட்டுக்காக இப்படி விளையாடுவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். இன்றைய நாள் என்னுடையது என தோன்றினால், முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட முயற்சி செய்வேன். பயிற்சியாளர், கேப்டன் எப்போதுமே நான் இப்படித்தான் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களது ஆதரவால் என்னால் எந்த பயமும் இன்றி அதிரடியாக விளையாட முடிகிறது. ஆர்ச்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை கவர் திசையில் அடிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இதேபோன்று ஆதில் ரசித்துக்கு எதிராக நான் அடித்த ஒரு சாட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த இன்னிங்ஸ் பார்த்து எனது குரு யுவராஜ் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.

இனி இப்படித்தான் ஆடுவோம்;
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது, “நாங்கள் 250-260 ரன் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படி நினைத்து ஆடும்போது சில போட்டிகளில் 120 ரன்னில் ஆட்டம் இழக்க கூடும். அதைப்பற்றி கவலை கொள்ளக்கூடாது. நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இதே ஸ்டைலில் தான் எதிர்காலத்திலும் விளையாட போகிறோம். அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு அதிக ஆதரவு அளிக்கபோகிறோம். 140 முதல் 150 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்களை எதிர்கொண்டு இப்படி ஒரு சதத்தை யாரும் அடித்து நான் பார்த்ததில்லை. இனி டி20 கிரிக்கெட் இப்படி தான் விளையாடப்படும். ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இதேபோன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்’’ என்றார்.

மனைவி, மகனுக்கு அர்ப்பணிக்கிறேன்;
தொடர் நாயகன் வருண் சக்ரவர்த்தி கூறுகையில், “இதுவே எனது சிறந்த பந்துவீச்சாகும். ஆனால் இன்னும் நிறைய முன்னேற வேண்டியது இருக்கிறது. இந்த விருது கிடைத்தது மிகவும் சிறப்பானது. இதனை மகன் மற்றும் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன், என் பெற்றோருக்கும் அர்ப்பணிக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த சூர்யகுமார் மற்றும் கம்பீருக்கு நன்றி’’ என்றார்.

The post 4-1 என தொடரை வென்றது இந்தியா; ரிஸ்க் அதிகமாக எடுக்கும் போது பலன்களும் அதிகமாக கிடைக்கும்: கேப்டன் சூர்யகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article