
ஜமைக்கா,
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். கிரீன் 46 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணியின் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் , ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான் கேம்பெல் 36 ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் போலந்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 82 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 99 ரன் எடுத்துள்ளது. இதன் மூலம் தற்போது வரை ஆஸ்திரேலியா 181 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.