தமிழகத்தில் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

4 hours ago 2

சென்னை,

சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை போலீசார் இதுவரை செயல்படுத்தாமல் இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.அதேபோல் பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்டுகள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கும், சென்னை கமிஷனருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article