*கார், ஆட்டோ, 9 செல்போன்கள் பறிமுதல்
திருமலை : தெலங்கானா மாநிலம், வாரங்கல்லை சேர்ந்தவர் கிருஷ்ணா, ஆடு வியாபாரி. இவர் சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இதற்காக நண்பர் ஒருவருடன் சேர்ந்து கள்ள நோட்டு அச்சடிக்க தொடங்கினார்.
பின்னர் அதனை வனப்பகுதியில் ஆடு மேய்க்கும் போது பணத்துடன் கூடிய டிரம் கிடைத்ததாகவும், ஆனால் அந்தப் பணத்தைப் பயன்படுத்தினால் தனக்கும், குடும்பத்தினருக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வந்தார்.
மேலும் அந்தப் பணத்தை யாருக்காவது கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், ரூ.1 லட்சம் கொடுத்தால் அந்த பணத்தை விட இரண்டு மடங்கு பணம் தருவதாக தெரிவித்தார்.
அவ்வாறு கிருஷ்ணா, ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள கேசவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த எர்ரகொல்லா ஸ்ரீனிவாஸ்க்கு தெரிவித்தார். பின்னர் கம்மம் மாவட்டத்தின் பால்வஞ்சா காட்டில் அசல் மற்றும் கள்ள நோட்டுகளுடன் ஏற்கனவே திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு டிரம்மை அவருக்குக் காட்டினர். அதில் இருந்த ரூ.500 நோட்டுகளை ஸ்ரீனிவாஸ் உண்மையான ரூபாய் நோட்டுகள் என்று நம்பி பத்து லட்சத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
இதற்கு கிருஷ்ணா ரூ.20 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் ஸ்ரீனிவாஸ் ஹனுமகொண்டாவிற்கு பணத்தைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்.
அதன்படி கடந்த 24ம் தேதி, பெகடபள்ளே கிராட் சாலையில் உள்ள கே.யு.சி அவுட்டர் ரிங் ரோட்டில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான இடம் என முடிவு செய்யப்பட்டது.
இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்படி கிருஷ்ணா தனது நண்பர்கள் நான்கு பேருடன் ஒரு காரில் ஹனுமகொண்டா சென்றார். கள்ள நோட்டுடன், காத்திருந்த போது ரோந்து போலீசார் அங்கு வந்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் இவர்களை கண்ட போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களின் பைகள் மற்றும் காரைச் சோதனை செய்தபோது, ஏராளமான ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் மற்றும் அச்சிடுவதற்குத் தேவையான வெள்ளைத் தாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் போலீசார் பிடித்து விசாரித்தபோது நடந்ததை அனைவரும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கள்ள நோட்டுகளை வைத்திருந்த கும்பலைச் சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்து ரூ.21 லட்சம், பணம் மற்றும் ரூ.38 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், கள்ள நோட்டுகள் அச்சிட தேவையான வெள்ளைத் தாள்கள், ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் ஒன்பது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post ₹38.84 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 8 பேர் கைது appeared first on Dinakaran.