சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987.எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.