3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட்

4 weeks ago 7

பிரிஸ்பேன்,

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் (152 ரன்), ஸ்டீவன் சுமித் (101 ரன்) சதம் அடித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (33 ரன்), கேப்டன் ரோகித் சர்மா (0) களத்தில் இருந்தனர். இதனைத்தொடர்ந்து 4-வது நாளான நேற்று இந்திய வீரர்கள், மொத்தம் 246 ரன்கள் எடுத்து பாலோ-ஆனை தவிர்க்கும் முனைப்புடன் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். அதில் ரோகித் சர்மா (10 ரன்) நிலைக்கவில்லை. இதன் பின்னர் ராகுலும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். அணி 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 3 முறை மழையால் ஆட்டம் தடைப்பட்டதால், நிறைய ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

ஆனாலும் கிடைத்த வாய்ப்பில் இந்திய அணியின் விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு தாக்குதல் தீவிரமாக இருந்தது. ஸ்கோர் 141-ஐ எட்டிய போது ராகுல் (84 ரன், 139 பந்து, 8 பவுண்டரி) நாதன் லயனின் சுழலில் ஸ்லிப்பில் சுமித்திடம் சிக்கினார். ஒற்றைக் கையால் கேட்ச் செய்து, முந்தைய தவறுக்கு சுமித் பரிகாரம் தேடிக் கொண்டார். அடுத்து இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டியை (16 ரன்) கம்மின்ஸ் வெளியேற்றினார். முகமது சிராஜ் 1 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் 22-வது அரைசதத்தை கடந்து அணியை கரைசேர்க்க மல்லுக்கட்டிய ஜடேஜா 77 ரன்னில் (123 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்ஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்தை தூக்கியடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அப்போது இந்தியாவின் வசம் ஒரு விக்கெட் மட்டுமே மிஞ்சியிருந்தது. பாலோ-ஆன் ஆபத்தை தவிர்க்க மேற்கொண்டு 33 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் ஜஸ்பிரித் பும்ராவும், ஆகாஷ் தீப்பும் 10-வது விக்கெட்டுக்கு ஜோடி போட்டு அச்சுறுத்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சை சர்வசாதாரணமாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காலில் அடைந்த காயத்தால் பாதியில் விலகியது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பும்ரா- ஆகாஷ் கூட்டணியை உடைக்க எதிரணி கேப்டன் கம்மின்ஸ் பல்வேறு யுக்திகளை கையாண்டும் பலன் இல்லை.

இறுதியில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆகாஷ் பந்தை பவுண்டரிக்கு தூக்கிவிட்டு பாலோ-ஆன் ஸ்கோரை கடந்த போது வெளியில் இருந்த இந்திய வீரர்கள் கையை உயர்த்தி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பவுண்டரி அடித்த கையோடு ஆகாஷ் அதே ஓவரில் பிரமாதமான ஒரு சிக்சர் விரட்டி அட்டகாசப்படுத்தினார்.

போதிய வெளிச்சம் இல்லாததால் இந்திய அணி முதலாவது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. பும்ரா 10 ரன்னுடனும் (27 பந்து, ஒரு சிக்சர்), ஆகாஷ் தீப் 27 ரன்களுடனும் (31 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

5-வது மற்றும் கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கியநிலையில் ஆகாஷ் தீப் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. இதன்படி இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட 185 ரன்கள் பின் தங்கி உள்ளது.

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். தற்போது மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இந்த டெஸ்ட் டிராவில் முடிவதற்கே அதிகபட்ச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article