3-வது டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்களை செய்ய வேண்டும் - கவாஸ்கர்

2 hours ago 1

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

கடந்த போட்டியில் (2-வது போட்டி) களமிறங்காத ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் களமிறங்குவார் என்று இந்திய கேப்டன் சுப்மன் கில் உறுதியளித்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இந்த 3-வது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்களை செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சிராஜ் மற்றும் ஆகாஷை அணியிலிருந்து நீக்க முடியாது. அவர்கள் இருவரும் இணைந்து 17 விக்கெட்டுகள் (2-வது போட்டியில்) வீழ்த்தியுள்ளனர். பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும். ஏனெனில் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் தொடரின் தொடக்க ஆட்டத்திலும் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தார். அதேபோல் நிதிஷ் ரெட்டிக்குப் பதிலாக குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும். இது இந்தியாவுக்கு மற்றொரு பந்துவீச்சு விருப்பத்தை வழங்கும்" என்று கூறினார்.

Read Entire Article