
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், கட்சியின் வளர்ச்சி பணிகள், பா.ம.க. உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர்களை, கடந்த மாதம் சென்னையில் 3 நாட்கள் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி கட்சியின் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாகவும் அவர் ஆலோசித்தார். அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை, கட்சியின் பொறுப்புகளில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டாக்டர் ராமதாசால் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வதற்கான அறிவிப்பை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு வருகிறார்.
நிர்வாகிகள் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம் என பா.ம.க.வில் அரசியல் பரபரப்பு நிலவி வந்த சூழலில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சமீபத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ராமதாஸ்க்கே கட்சியில் முழு அதிகாரம் இருப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அன்புமணி தலைமையில் நடந்த நிர்வாக குழு கூடத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மிக முக்கிய தீர்மானமாக அன்புமணிக்கே அதிகாரம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு;
கட்சியை வழிநடத்திச் செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் பணியாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு; பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதி 15ன் படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதை இக்கூட்டம் நினைவு கூர்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்அன்புமணி ராமதாஸ் தலைமையில், பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானவை ஆகும்.
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமை மீது இந்தக் கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியினை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும் அன்புமணி ராமதாஸ் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு கூட்டம் உறுதி ஏற்கிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.