![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/28/36285564-engwin.webp)
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டக்கெட் 51 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன சாம்சன் 3 ரன்களிலும், அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா 24 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான திலக் வர்மா (18 ரன்கள்) இந்த முறை ஏமாற்றம் அளித்தார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஒரு புறம் போராட மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தது. சுந்தர் 6 ரன்கள், அக்சர் படேல் 15 ரன்கள், துருவ் ஜுரெல் 2 ரன்கள் என விரைவில் ஆட்டமிழக்க இந்திய அணி தோல்வியை நோக்கி பயணித்தது.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான் 3 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.