மதுரை தெப்பத் திருவிழா.. தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்

4 hours ago 3

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்பாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர்கள், குறிப்பாக வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 

Read Entire Article