
லாகூர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிடன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போர் சூழ்நிலை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் பங்குச்சந்தை இன்று 3 ஆயிரத்து 500 புள்ளிகள் சரிந்துள்ளது. காலை வர்த்தகம் தொடங்கியபோதே 2 ஆயிரம் புள்ளிகள் சரிந்து தொடங்கிய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்தது.
பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறினர். இதனால், பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. வர்த்தக இறுதியில் 3 ஆயிரத்து 545 புள்ளிகள் சரிவடைந்து 1 லட்சத்து 11 ஆயிரத்து 326 புள்ளிகளில் நிறைவடைந்தது.