
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியுள்ளது.
இதன்படி, பாகிஸ்தானில் பதிவு செய்த அனைத்து விமானங்கள், பாகிஸ்தானிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், ராணுவ விமானங்கள் உள்பட குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களும் இந்திய வான்வெளியில் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறையனது, ஏப்ரல் 30-ந்தேதி முதல் மே 23-ந்தேதி வரை அமலில் இருக்கும் என இந்தியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், இரு நாடுகளும் தங்களுடைய வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்த முடியாத வகையில், விமானங்களை தடுத்துள்ளன.
இந்த நடவடிக்கையை கடந்த 6 நாட்களுக்கு முன்பே பாகிஸ்தான் எடுத்திருந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல்கள்களில் பாகிஸ்தான் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், முக்கிய நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.